தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை சார்பில், தேவேந்திரகுல வேளாளர் அரசியல் எழுச்சி மாநாடு பேரவைத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் விவிடி சிக்னல் அருகே நேற்று (பிப்.18) நடைபெற்றது.
இதில் திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது மேடையில் எம்.பி கனிமொழி பேசுகையில், "பாஜக நம்மை உணர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளக்கூடிய இயக்கம் இல்லை. நம்முடைய பிளவுகள் இருந்தால் கூட அதை அதிகப்படுத்தி இங்கே இருக்கக் கூடிய அமைதியைக் குறைக்கக் கூடிய வகையிலே சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மைப் பிரித்து வன்முறைகளை உருவாக்கி அந்த வன்முறை அரசியலிலே அவர்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி ஒருவர் நாங்கள் ரிஷிகளின் வழியே வந்தவர்கள் என்று கூறுகிறார். அதற்குப் பதிலாக நாங்கள் எல்லாம் சாதாரண சூத்திர மக்கள். என்று நான் கூறினேன். இப்படி ஒரு மனநிலையை வைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சி பாஜக.
இந்த பகுதியில் மழை, வெள்ளத்தின் போது பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக நாட்டின் நிதியமைச்சர் வருகிறார். இங்கே இருக்கக்கூடிய இடங்களை எல்லாம் பார்வையிட அழைத்துச் செல்கிறோம். இங்கே இருக்கக்கூடிய கண்ணீர் கதைகளையும், இங்கே மக்கள் பட்ட அவதிகளையும், இங்கே வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதையும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதையும், கடைகள் சிறு,குறு தொழில்கள் எல்லாம் அழிந்து போனதை எடுத்துச் சொன்னோம். இதையெல்லாம் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அவருடைய அக்கறை ஒரு கோயிலைச் சுற்றியிருந்த சகதியும், அந்த கோயிலில் பணியாற்றிக் கொண்டிருந்த குருக்களுக்கான சம்பளத்தைப் பற்றித் தான். நம்ம மக்களைப் பற்றி கவலை இல்லை. கவலை இருந்தால் நிவாரணத்திற்கு ஒன்றிய அரசாங்கம் நிதி கொடுத்திருக்கும். இன்றைக்கு வரைக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.
இவர்கள் நம்முடைய மக்களைப் பற்றி அக்கறை மற்றும் கவலை கொள்வார்களா என்றால் இல்லை. பாஜக கொண்டு வந்திருக்கக் கூடிய நச்சு விதைகளை மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் இங்கே விதைத்து அந்த மரங்களுக்கு அடியே குளிர் காய நினைக்கக் கூடியவர்கள் தான் பாஜக" என்று கூறினார்.
இதையும் படிங்க: "எய்ம்ஸ் விவகாரத்தில் முதல் குற்றவாளி எடப்பாடி பழனிசாமி தான்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு