திருநெல்வேலி : தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் அரசால் நியமிக்கப்படுவது வழக்கம். அதாவது அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது அமைச்சராக இருந்தால் அவரே அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செயல்படுவர். அப்படி இல்லாத பட்சத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அங்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்படுவர்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களை மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் திருச்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் கே.என்.நேரு திருநெல்வேலி மாவட்ட புதிய பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பொறுப்பு அமைச்சர்கள் மாற்றப்பட்டதன் பின்னணியில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/KAupQBeJ7b
— TN DIPR (@TNDIPRNEWS) October 8, 2024
பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவது ஏன்? : பொதுவாக அரசுத் திட்டங்களை கண்காணிக்கவும், மாவட்டங்களில் அரசுப் பணிகளை துரிதப்படுத்தவும், அரசு சார்பில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதே சமயம், மறைமுகமாக ஆளுங்கட்சியில் நடைபெறும் பல்வேறு நிர்வாகப் பணிகளையும், ஆளுங்கட்சியில் நிலவும் குழப்பங்களை சரி செய்யவும் பொறுப்பு அமைச்சர்கள் மறைமுகமாக செயல்படுவார்கள். குறிப்பாக, உட்கட்சி பூசல் ஏற்பட்டால் அதை சரி செய்ய பொறுப்பு அமைச்சர்கள் ஆளுங்கட்சியின் வழிகாட்டுதலின்படி செயல்படுவார்கள்.
உட்கட்சி பூசல் : திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் உட்கட்சி பூசல் தொடர்ச்சியாக இருந்து வருவது திமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. குறிப்பாக, மாநகரப் பகுதியை பொறுத்தவரை, மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் ஒரு அணியாகவும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஒரு அணியாகவும், முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல் ஊரகப் பகுதியில் முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பன் ஒரு அணியாகவும், ராதாபுரத்தைச் சேர்ந்த தற்போதைய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த உட்கட்சி பூசல் காரணமாக மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் தலைவர்களிடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க : கோவைக்கு மீண்டும் செந்தில் பாலாஜி! 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
முன்னாள் மேயர் ராஜினாமா : மாநகரப் பகுதியில் நிலவிய உட்கட்சி பூசலால் திமுக தலைமையால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணன் சமீபத்தில் அதிரடியாக ராஜினாமா செய்தார். ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக தொடர்ச்சியாக மாமன்றக் கூட்டங்களில் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
மேயரை மாற்றக் கோரி கட்சித் தலைமைக்கு தொடர்ச்சியாக புகார் அளித்தனர். இது போன்ற சூழ்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். எனவே, திமுகவில் மாநகராட்சியில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு காணும்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு திமுக தலைமை உத்தரவிட்டது. அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசு பல கட்டங்களாக திருநெல்வேலிக்கு வருகை தந்து கவுன்சிலர்கள், மேயர் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், கட்சி தலைமைக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என அதிரடியாக கவுன்சிலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனாலும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சைக் கேட்காமல் தொடர்ச்சியாக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் குழப்பம் ஏற்படுத்தி வந்தனர்.
இதனால் வேறு வழி இல்லாமல் மேயராக இருந்த சரவணன் சமீபத்தில் திமுக தலைமை அறிவுறுத்தியதால் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
அமைச்சர் மீது திமுக அதிருப்தி : திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயர் தேர்தலிலும், திமுக கவுன்சிலர்கள் கட்சி தலைமைக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டனர். இதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மீது திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருவதால், தனக்கு கூடுதலாக பொறுப்பு அமைச்சர் பதவி வேண்டாம் என தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் அவரது செயல்பாடு கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
மாநகராட்சி பிரச்னையை அவர் சரியாக கையாளவில்லை என திமுக தலைமை கருதியது. இது தவிர திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் மிக மூத்த நிர்வாகிகள் ஆவர்.
குறிப்பாக மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் மைதீன் கான் ஏற்கனவே அமைச்சராக பதவி வகித்தவர். வயதிலும், அனுபவித்திலும் மூத்தவர். அதேபோல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் ஆவுடையப்பன் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.
அதேபோல் சபாநாயகர் அப்பாவும் தற்போதையை சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அனுபவம் கொண்டவர். அவர்களை ஒப்பிடும்போது அமைச்சர் தங்கம் தென்னரசு அனுபவம் குறைந்தவர் என்பதால் அவரால் மாவட்ட நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், உட்கட்சி பிரச்னை விவகாரத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை கண்டிப்போடு நடத்துவதில் தர்ம சங்கடம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, மூத்த நிர்வாகிகளை சமாளித்து உட்கட்சி பூசலை சரி செய்ய சிரமம் ஏற்பட்டதால், தன்னை திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக தலைமையிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற சூழலில் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட புதிய பொறுப்பு அமைச்சர் நியமனம் : தற்போது திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு திமுகவில் மிக மூத்த அமைச்சர் ஆவார்.
அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் என இரண்டிலும் அதிக அனுபவம் கொண்டவர். எனவே, கட்சியில் ஏதாவது பிரச்னை என்றால் அவரால் நிர்வாகிகளைக் கட்டுக்குள் கொண்ட வர முடியும். அதேபோல, மாவட்ட நிர்வாகிகளைக் கண்டிப்போடு நடத்துவதிலும், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எந்த தடையும் இருக்காது என்பது திமுகவின் கணக்காக உள்ளது.
உள்ளாட்சியில் கைதேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு : அமைச்சர் கே.என்.நேரு தற்போது உள்ளாட்சித் துறையை கவனித்து வருகிறார். ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் தான் திமுகவில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, நேற்று கூட பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய திமுக சேர்மன் உட்கட்சி பூசல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது போன்ற சூழ்நிலையில் மூத்த அமைச்சரான கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால் வரும் காலங்களில் உட்கட்சி பூசலை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அவரை திமுக தலைமை நியமித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் பிரத்யேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "ஏற்கனவே பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேருவும் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார். பொறுப்பு அமைச்சர்களின் திடீர் மாற்றத்தில் அரசியல் காரணம் எதுவும் இல்லை. மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லாததால் அங்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவ்வளவுதான்" என்று தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் மாற்றம் ஏன்? : கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை அதே மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் அமைச்சர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த காரணத்தால், சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் மனோ தங்கராஜ் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதன் காரணமாக அமைச்சர் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாறியது. எனவே, அங்கு பிற மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு அங்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்