மதுரை : மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நோபல் பரிசானது கடந்த 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென்கொரியாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹேன் ஹாங் (Han Kang) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று உண்மைகள் மற்றும் மனித வாழ்வின் பலவீனத்தை வெளிப்படுத்தும் 'தீவிர கவிதை உரைநடை' படைப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
53 வயதான ஹேன் ஹாங், 'தி வெஜிடேரியன்' (The Vegetarian) என்ற நாவலுக்காக கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசை வென்றார். ஒரு பெண் இறைச்சி உண்பதை நிறுத்துவதென முடிவு செய்த பின் ஏற்படும் விளைவுகளை இப்படைப்பு விவரித்தது. 'ஹூமன் அக்ட்ஸ்' (Human Acts) என்ற இவரது மற்றொரு நாவல், கடந்த 2018ம் ஆண்டு புக்கர் பரிசுக்கான இறுதிச்சுற்று வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹேன் ஹாங் எழுதிய 'தி வெஜிடேரியன்' என்ற நாவலை தமிழில் 'மரக்கறி' எனும் தலைப்பில் கவிஞர் சமயவேல் மொழி பெயர்த்துள்ளார். இதுகுறித்து சமயவேல் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு, கீழ்க்காணுமாறு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
சர்வதேச கவனத்தை ஈர்த்த ஹேன் ஹாங்: 2024ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசை வென்றுள்ள தென்கொரியா பெண் எழுத்தாளர் ஹேன் ஹாங் கடந்த 1970ம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்தவர். அந்நாட்டின் இலக்கிய உலகில் கவிஞராகவே தன்னை முதன்முதலாக வெளிப்படுத்தினார். அதன் பிறகு 'தி வெஜிடேரியன்' என்ற தலைப்பில் மூன்று பாகங்களைக் கொண்ட புதினத்தை உருவாக்கினார். கடந்த 2016ம் ஆண்டு மேன் புக்கர் பரிசை வென்றார். இதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.
என்னுடைய இளமைப் பருவத்திலிருந்து நான் அனைத்து நாட்டு இலக்கியங்களையும் வாசிப்பது வழக்கம். அப்படித்தான் தென்கொரியா இலக்கியங்கள் எனக்கு அறிமுகமாகின. எனக்கு கொரியாவின் மீது தனி ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்துதான் புத்த மதம் சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பரவியது.
அப்போது இங்கிருந்து நூல்களைக் கொண்டு செல்வது மிக ஆபத்தான ஒன்றாக இருந்தது. ஆகையால், 18 பேர் அடங்கிய புத்த பிக்குகள் குழு அதனைப் படித்து மனப்பாடம் செய்து அந்த கருத்துக்களை அங்கே கொண்டு சென்றனர்.
மரணம் பற்றிய பெரிய ஆய்வு: ஹேன் ஹாங்கின் 'தி வெஜிடேரியன்' நாவலும் இதுபோன்ற தத்துவார்த்த பின்னணியில் உருவாக்கப்பட்டதாகும். அதன் பொருட்டு அந்த நாவல் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. எழுத்தாளர் ஹேன் ஹாங்கின் மனதிலிருந்த அடிப்படை கேள்விகளின் பின்புலத்திலிருந்து இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் பிறக்கிறோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் சாகிறோம்? என்பதோடு மட்டுமின்றி மரணம் பற்றிய பெரிய ஆய்வுதான் இந்த நாவல்.
இந்த பூமிப் பந்தில் உருவாகியுள்ள அனைத்து உயிர்களோடு மனிதர்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார் ஹேன் ஹாங். புல் அமர்ந்து கொண்டே வளர்கிறது. ஆனால் மனிதனுக்கு பல்வேறு போராட்டங்கள் என்ற ஜப்பானிய ஹைக்கூ கவிதை போன்று இந்த நாவல் தாவரங்களையும் ஆய்வு செய்கிறது. மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வாழ வேண்டிய நிலை ஏன் உள்ளது? என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார்.
புத்த மரபின் அடிப்படையில் இந்த நூலை அவர் படைத்துள்ளார். மேலை நாட்டு தத்துவத்தோடு முரண்படும் மறுப்புக் கோட்பாடு, புத்தக் கோட்பாடு ஹேன் ஹாங்க்கு இருந்த தனிப்பட்ட உளவியல் சிக்கல் இவையெல்லாம் சேர்த்து ஒரு நாவலாக 'தி வெஜிடேரியன்' உருவாகி உள்ளது.
தி வெஜிடேரியன் மரக்கறி ஆனதன் பின்னணி: தி வெஜிடேரியன் என்ற நாவலை தமிழாக்கம் செய்யும்போது சைவம் என மொழி பெயர்த்தால் அது ஒரு மதம் சார்ந்த கருத்தியலாக மாறிவிடும் என்ற ஆபத்து இருந்தது. ஆனால் இந்த நாவல் எந்த மதத்தையும் குறிப்பிடுகின்ற ஒன்றாக இல்லை என்பதால் தலைப்பிடுவதில் அதிக கவனம் கொடுக்க வேண்டி இருந்தது.
ஆகையால் நீண்ட விவாதத்திற்கு பிறகு 'மரக்கறி' என்ற பெயரில் மொழி பெயர்த்தேன். இன்றைக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஈழத்தில் வாழ்கின்ற மக்களிடம் 'மரக்கறி' என்ற சொல் அன்றாடம் புழக்கத்தில் உள்ளது. ஆகையால் அந்த தலைப்பையே வைத்தோம்.
இதையும் படிங்க : இலக்கியத்திற்கான நோபல் பரிசை வெல்லும் பெண் எழுத்தாளர்! யார் இந்த ஹேன் காங்?
மனச்சிக்கலிலிருந்து விடுவித்த நோபல்: ஹேன் ஹாங், மேன் புக்கர் பரிசை பெறுவதற்கு முன்பிருந்தே என்னோடு நட்பிலிருந்தார். இந்த நாவல் குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய விமர்சனத்தை படித்துவிட்டு தான் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போதிலிருந்து அவருடனான நட்பு தொடர்கிறது. அவரது உளவியல் ரீதியான பல்வேறு சிக்கல்களிலிருந்து இந்த விருதுதான் விடுவித்தது என்றால் அது மிகை இல்லை. தற்போது நோபல் பரிசு கிடைத்த சமயத்தில் கூட அவர், 'எழுத முடியாத மனச்சிக்கலிலிருந்ததாகவும், நோபல் பரிசுக்குப் பிறகு தனக்குள் உத்வேகம் பிறந்துள்ளதாகவும்' அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் இரண்டு உத்திகள்: ஆறு புதினங்கள், இரண்டு கவிதை தொகுப்புகள் என 9க்கும் மேற்பட்ட படைப்புகளை ஹேன் ஹாங் படைத்துள்ளார். அவர் எழுதிய மனித வாழ்வியல் என்ற தலைப்பிலான மற்றொரு நாவலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஹேன் ஹாங்க்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு மிக முக்கிய காரணம் அவரது எழுத்துநடைதான்.
இதுவரை எவரும் பயன்படுத்தாத ஒரு பாணியை அவர் பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே அவர் கவிதையில் புலமை பெற்றவர் என்பதால் கவிதையோடு கூடிய உரைநடையை 'தி வெஜிடேரியன்' நாவலில் பயன்படுத்தியுள்ளார். கவித்துவ உரைநடை, உளவியல் உரைநடை என இரண்டு உத்தியை இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார். இதன் காரணமாக வாசிப்போர் அனைவருக்கும் புதிய அனுபவம் கிடைக்கும்.
18 மாதத்தில் மரக்கறி: இந்த நாவலை நான் மிகவும் விரும்பி வாசித்தேன். இதனை மொழி பெயர்ப்பதற்கு 18 மாதங்கள் ஆகின. இதே போன்ற உரைநடையை பயன்படுத்திய லிடியா டேவிஸ் எழுத்து நடை இந்த நாவலில் இருப்பதை உணர்ந்து மொழி பெயர்த்தேன். எழுத்தாளர் கோணங்கி உட்பட பல இலக்கிய நண்பர்கள் பாராட்டினர்.
மரக்கறி நாவலை தமிழ் வெளி பதிப்பகம் முறைப்படி காப்புரிமை பெற்று வெளியீடு செய்துள்ளது. இதற்கான காப்புரிமையை பெறும் நடைமுறை லண்டனில் அதற்குரிய முகவர்கள் மூலம் நடைபெற்றது. இந்திய மதிப்பில் ரூ.13,000 இதற்காக கட்டணமாக செலுத்தப்பட்டது. இது என்னுடைய மனதுக்கு பிடித்த ஒன்று என்பதால் நான் பொருட்செலவைப் பற்றி கவலைப்படவில்லை.
நோபல் பரிசு: 2024ம் ஆண்டிற்கான நோபல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற அட்டவணையில் ஹேன் ஹாங் மிக கடைசி இடத்திலிருந்தார். பலரும் எதிர்பார்க்காத நபராக தான் அவர் இருந்தார். நோபல் பரிசுக்கான முதல் பட்டியலில் ஹேன் ஹாங் பெயர் இல்லை என்பது எனக்கு வியப்பாக இருந்தது.
அதன்பிறகு நோபல் பரிசு ஹேன் ஹாங்க்கு வழங்கப்பட்டது பெருமையாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும். குறிப்பாக இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிறுகதை ஆசிரியர்கள் இதனைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்