திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பவித்ரமாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தின் திறப்பு விழா இன்று (பிப்.18) நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "இந்த பள்ளியில் ஒரு நூலகம் அமைக்க உதவி செய்ய வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் என என்னிடம் கேட்டுக் கொண்டார், அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. அதன் விளைவு இன்று இந்த நூலகத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
இந்த நூலகத்தில் அமைந்துள்ள அலமாரிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இதற்குப் பின்னால் இருப்பவர் ஒரு பிரபல திரைப்பட இயக்குநர் அவரை இன்று அழைத்திருந்தேன். ஆனால் அவர் வர மறுத்து விட்டார், நீங்கள் தான் இதைக் கொடுக்க வேண்டும். நாங்கள் பின்னால் தான் இருப்போம் என்று கூறிவிட்டார்.
கண்டிப்பாக ஒருநாள் அவர் வருவார், அப்போது நான் இங்கு அவரை அழைத்து வருவேன்.அவர் இது மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டத்தில் நான் எஸ்பி-யாக இருந்த போது 30 அரசுப் பள்ளிகளுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கு தலா 10,000 ரூபாய் கொடுத்தார்.
இது போன்ற பல நூலகங்கள் அமைப்பதற்கு உதவியாக இருந்தவர், வேறு யாருமில்லை தீரன் அதிகாரம், சதுரங்க வேட்டை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வினோத் மற்றும் அவரது நண்பர் இயக்குநர் சரவணன் ஆகியோர் தான்.
இந்த நூலகம் அமைப்பதற்கு உதவிய இருவருக்குப் பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலகம் அமைப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் அவர் உதவி செய்தது சாதாரண விஷயம் கிடையாது. இது தொடர்பாக இயக்குநர் வினோத்திடம் நான் பேசிய போது, “மக்களிடம் சம்பாதித்த பணத்தை மக்களுக்குச் செலவு செய்கிறேன்” என்று அவர் கூறினார் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி வானதி என்பவர் 'சமத்துவம் ஒரு மகத்துவம்' என்கிற தலைப்பில் வள்ளுவர், ஔவையார், பாரதி என அறிஞர்கள் பலரின் கருத்தை மேற்கோள்காட்டி மழலை குரலில் பேசியது அங்குள்ள அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிவில் நீதிமன்ற நீதிபதியான விஏஓ லூர்து பிரான்சிஸ் மகன்... தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை!