தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, தர்மாம்பாள் நகரைச் சேர்ந்தவர் காமராஜ் (60). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு மகள் உள்ளார். அவர் வெளியூரில் இருப்பதால், காமராஜ் மட்டும் தனியாக வசிக்கிறார்.
இந்நிலையில் தன் மகள் திருமணத்திற்காக, பல ஆண்டுகளாக விவசாயம் செய்து சேமித்து வைத்திருந்த ரூ.21 லட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு இருக்காது என்பதால் தஞ்சாவூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் வசிக்கும் தன் அண்ணன் கவுன்ராஜிடம் கொடுத்து வைக்க திட்டமிட்டார்.
இதையடுத்து கடந்த 19ம் தேதி, பணத்தை கட்டப்பையில் வைத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனம் மூலம் அண்ணன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் நடுப்படுகை என்ற கிராமத்தில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கும்போது பை தவறி கீழே விழுந்துள்ளது. இதையறியாமல் நீண்ட துாரம் சென்ற அவர் தனது பையை காணாததால், வந்த வழி முழுவதும் தேடி உள்ளார். எங்கு தேடியும் பை கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: திருக்குறள் சொன்னா சர்பத் இலவசம்! பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் ஜூஸ் கடை!
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திருவையாறு மருவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் காமராஜ் சென்ற வழியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நடுப்படுகையைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் பெண், பணம் இருந்த பையை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து விசாரித்து அந்த பெண்ணின் உறவினரிடம் இருந்த ரூ. 21 லட்சம் பணத்தை மீட்டு நேற்று காமராஜிடம் டிஎஸ்பி அருள்மொழி அரசு ஒப்படைத்தார்.