விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் உள்ளது, ஸ்ரீ மாரியம்மன் கோயில். 78 வருடங்களாக 8 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்டது என்ற நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்திற்கு மண்டகப்படி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், இரண்டாம் மண்டகப்படி திருவிழா கொண்டாடும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமாக, தக்காராக உள்ள ரேவதி முதலாவதாக திருவிழா ரசீதை பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரண்டாம் மண்டகப்படி திருவிழா கொண்டாடும் சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் சேர்ந்து, இது குறித்து தக்கார் ரேவதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், முறையான பதில் இல்லாததால், ரசீது பெற்ற தரப்பினருக்கும், ரசீது பெறாத தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தங்கல் டிஎஸ்பி சுப்பையா, ஆய்வாளர் வேதவள்ளி மற்றும் சார்பு ஆய்வாளர் சுரேந்திரன் ஆகியோர், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், முதல் மண்டகப்படி மற்றும் 2ஆம் மண்டகப்படி ஆகிய இரு தரப்பினருக்கும் தலா ரூ.2,000 வீதம், ரசீது வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருவிழாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, காவல் துறையினர் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டதையடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூகத்தினர் அனைவரும் கலைந்து சென்றனர். திருவிழாவின்போது ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.