திருநெல்வேலி: தமிழகத்திலேயே முதன் முதலாக நெல்லை மாவட்டத்தில் தான் 1964 ல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இளநிலை மற்றும் முதுநிலை என 600 மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரியில், ஆய்வுக்கூடங்கள், மருந்துகள் பரிசோதனை செய்யும் அறை, மருந்துகள் தயார் செய்யும் அறை என மூன்று ஏக்கர் பரப்பளவிற்குள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.
60 ஆண்டுகளாக ஒரே இடத்தில் சிறிய பரப்பளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி இருக்கும் இந்த கல்லூரி வளாகத்தை விரிவுபடுத்த, மத்திய மாநில அரசிடம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், உயர் நீதிமன்றத்தையும் நாடினர். இந்நிலையில், கல்லூரியின் எதிர்கால நலனுக்காகவும், மாணவர்கள் மீது அக்கறையாலும் கல்லூரியை இடமாற்ற செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் 8 ஆண்டுகளாகியும் இதுவரை நீதிமன்றம் பரிந்துரைத்த பல்கலைக்கழக இடத்தையோ அல்லது வேறு தகுதி வாய்ந்த இடத்தையோ கேட்டு பெறுவதற்கான எந்த முயற்சிகளும் மருத்துவமனை நிர்வாகம், செய்யாத காரணத்தால் பட்ஜெட்டின் போது கல்லூரி உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி அரசு சித்த மருத்துவ கல்லூரியை தகுதி வாய்ந்த புதிய இடத்தை தேர்வு செய்து NCISM விதிகளின்படி புதிய கல்லூரி உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியின் பாழடைந்த வெளி நோயாளர் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களை கட்ட தமிழக அரசு பட்ஜெட்டில் 40 கோடி ரூபாய் அறிவித்தும் இன்னும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அதனை உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், தங்களது மருத்துவ ஆடையில் கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதி தொடங்கி பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்றால் புதிய கல்லூரி வளாகம் வேண்டும். இன்று வரை மாநகர பகுதிக்குள் மூன்று ஏக்கருக்குள் சுருங்கி கிடக்கும் முதல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உயர் நீதிமன்ற உத்திரவின்படி மிகப்பெரிய அளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடமாற்றம் செய்து அங்கு புதிதாக கட்டப்பட வேண்டும்.
அதேநேரம் தமிழக அரசு அறிவித்த 40 கோடி ரூபாய் பணத்தையும் பயன்படுத்தி மருத்துவமனையை மிக சிறப்பாக புனரமைக்க வேண்டும். தற்போதைய சூழலால் எங்களால் முழுமையாக படிக்க கூட முடியவில்லை போதுமான ஆய்வுக்கூட வசதிகள் இல்லாததால் முழுமையாக படிக்க முடியவில்லை என மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீங்கள் பேசியதன் பின்விளைவுகள் தெரியாதா? - அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு நீதிமன்றம் கேள்வி!