கள்ளக்குறிச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் நாளை (அக்.2) கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எறஞ்சி பகுதியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.
மேலும், இந்த மது ஒழிப்பு மாநாட்டில், அதிமுக மற்றும் விஜயின் தவெக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன், பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர யார் வேண்டுமானாலும் மாநாட்டில் பங்கு பெறலாம் எனக் கூறி இருந்தார். மேலும், மாநிலத்தில் ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கையை எழுப்பினார். அவருடைய இந்தப் பேச்சானது தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாளை நடைபெறும் மாநாட்டில் மாநாட்டு முகப்பு, மாநாட்டுத் திடல் அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதனை நேற்று இரவு பார்வையிட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது; “மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-இல் பூரண மதுவிலக்கு கொள்கையை நாம் கடைபிடிக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைநிலை அமைப்பான மகளிர் அமைப்பு நடத்தும் பூரண மதுவிலக்கு மாநாட்டில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அவசியமானது'' என்றார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - ஆளுநர் வேண்டுதல்.. முதலமைச்சர் வாழ்த்து!
தொடர்ந்து அவர், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்நாடு அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாகவும், ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சரை இதற்காக பாராட்டுகிறேன்'' எனக் கூறினார்.
மேலும், அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், மதுவிலக்கு தொடர்பான பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், மதுக்கடைகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு வேறு துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.
பின்னர் திருமாவளவனிடம், இந்தியா முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மதுவிலக்கு வேண்டும் என அனைவரும் தீர்மானம் போட்டால் மதுவிலக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், 'இது ஒரு நல்ல ஆலோசனை. ஊராட்சி மன்றத் தலைவர்கள் அந்தந்த ஊராட்சிகளில் மதுவிலக்கு தொடர்பான தீர்மானங்களை ஏற்ற வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கூடிய ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. இது தொடர்பாக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கட்டாயமாக மனு கொடுப்போம். பிரதமரைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இது தொடர்பாக அமைச்சரைச் சந்தித்து எங்களுடைய கட்சியின் சார்பில் கோரிக்கை மனு தருவோம்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்