சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சிதம்பரத்தில் எம்பி திருமாவளவனும், விழுப்புரத்தில் எம்பி ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகிறனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், 'இது இந்தியா கூட்டணிக்கும், என்டிஏ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் இல்லை; இது மக்களுக்கும் சங் பரிவார்களுக்கும் இடையேயான தேர்தல் எனக் கூறினார். இதனடிப்படையில் தேர்தல் அமையும். ஆனால் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வாக, இதனை முறியடிக்க மக்கள் 100 சதவிகிதம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வாக்களர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவே ராகுல் காந்தி இரண்டாம் கட்ட நடைபயணம் மேற்கொண்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி பற்றி பாஜக பேசியதே தவறு என்றும் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாவது அரசியல் கட்சி என்ற இடத்தைப் பிடிக்க துடிப்பதாகவும், இதற்காக பல்வேறு சதிகளை செய்துவருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பாஜக - பாமக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'சாதிய மதவாத அரசியலில் பாமக - பாஜக திளைத்துள்ளனர். ஓபிஎஸ்சி பிரிவு மக்களுக்கு விசிக எப்போதும் அரணாக இருக்கும். இம்மக்களுக்களின் இட ஒதுக்கீடுக்காக மக்களைவையில் விசிக கேள்வியெழுப்பியதோடு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய இரண்டிலும் குரல் எழுப்பியுள்ளோம். எப்போது இம்மக்களுக்கும் விசிக துணையாக இருக்கும்.
அதோடு, எம்பிசி பிரிவு மக்களை பாமக கைவிட்டாலும் கூட, அவர்களுக்கு விசிக எப்போது உறுதுணையாக நிற்கும் என திருமாவளவன் உறுதியளித்தார். அதிமுக - பாமக ஆகிய வாக்குவங்கி நிறைந்த கட்சி சிதறிப்போனதால், பாஜக - 0, பாமக - 1 என கணக்கீடு செய்தாலும், இதில் ஒன்றுமில்லை. இன்னும் பாஜக, அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. ஆனால், திமுகவின் கூட்டணிதான் கட்டுக்கோப்பானது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, திமுக களம் காணும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார்.
இதையும் படிங்க: "விழுப்புரத்தில் மீண்டும் நான்தான் போட்டியிடுகிறேன்" - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உறுதி