விழுப்புரம்: விக்கிரவாண்டியை அடுத்த தொரவி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை என்பதால், அந்தக் கட்சிக்கு தோ்தல் முடிவு மூலம் மக்கள் நெருக்கடியை கொடுத்துள்ளனா். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இனி பாஜக அரசால் தான்தோன்றித்தனமாக, தன்னிச்சையாக செயல்பட முடியாது.
இதே நேரத்தில் 'இந்தியா' கூட்டணிக்கு மக்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றியை தந்தாலும், ஆட்சியமைக்கக்கூடிய வெற்றி கிடைக்கவில்லை. இதை 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவா்கள் எச்சரிக்கையாகவும், அறிவுரையாகவும் கருத வேண்டும். 'இந்தியா' கூட்டணி இன்னும் வலுப்பெற முயற்சிக்க வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தையும் பெற வேண்டும்.
எதிர்காலத்தில் 28 கட்சிகள் ஒன்று சோ்ந்து ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், மக்களுக்கு நிலையான ஆட்சியைத் தரும் நல்லிணக்கத்தையும் பெற வேண்டும். பாஜக அரசு நிலையான அரசாக அமையாவிட்டால், நாட்டு மக்களைக் காப்பாற்ற 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என கூறினார். இந்நிகழ்வின் போது விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் மற்றும் விசிக முன்னாள் மாவட்டச் செயலர் மு.சேரன், கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தொகுதிச் செயலர் கரிகாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கு 40 கோடி ஜிஎஸ்டியா? - என்னை காப்பாற்றுங்கள் எனக் கதறி அழுத பெண்! - WOMAN GETS 40 CRORE GST