விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14 துவங்கி ஜூன் 21 அன்று நிறைவடையும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளிலிருந்தும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, "விக்கிரவாண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி என்னுடைய கல்லூரி கால நண்பர், மிகச் சிறந்த பெரியாரிஸ்ட். இன்று அவர் இல்லை. அதன்பிறகு, புகழேந்தி என்னிடம் உயிருக்கு உயிராக இருந்தவர், அவரும் இன்று இல்லை. இருவரும் உயிரோடு இல்லை என்றாலும், அவர்களுடைய நினைவு இந்த தொகுதி மக்களுடைய உள்ளத்திலே என்றும் நிலைத்திருக்கும்.
இங்கு இருக்கின்ற அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீராக இருந்தாலும், கணேசனாக இருந்தாலும், சக்கரபாணியாக இருந்தாலும், சிவசங்கராக இருந்தாலும் சரி, இவர்களெல்லாம் போன தேர்தலில் பணியாற்றியவர்கள். இப்பொழுது மீண்டும் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்து இருக்கிறார் ஸ்டாலின். இந்த தொகுதியைப் பொறுத்தவரையில், நிச்சயமாக முன்னதாக பேசியவர்கள் சொன்னதைப்போல வெற்றி பெறுவது பெரிதல்ல, எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு இந்த வெற்றியை பெற்றுத் தர வேண்டும். அது நம் கடமை" எனத் தெரிவித்தார்.
திருமாவளவன் பேசியதாவது, “மோடி அரசின் இலக்கு பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே தவிர, மக்கள் நலனைப் பற்றிய கவலை இல்லை. சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆபத்து இருக்கிறது, சமூகநீதிக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து முதன்முதலில் கூட்டணியை உருவாக்கியவர்; காங்கிரஸ் நாட்டை ஆள வேண்டும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் முதலாக குரல் கொடுத்து பாடுபட்டவர் ஸ்டாலின். அதன்பிறகு அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக இந்த அணியில் சேர்ந்து இந்த அணியை (இந்தியா கூட்டணி) வலுப்பெறச் செய்துள்ளனர்.
என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே இந்த நொடி முதல் தீவிரமாக பணியாற்றி, அன்னியூர் சிவாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதை 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஒரு முன்னோட்ட வெற்றியாக அமைக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராக வரலாம். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பேசிய அண்ணாமலையும், அக்கட்சியின் உறுப்பினர்களும் தற்போது எங்கே என்று தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஜெகத்ரட்சகன், "விக்கிரவாண்டி ஒரு காலத்தில் காடு மேடாக இருந்தது. பொன்முடியின் முயற்சியால் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் வந்துள்ளன. இன்னும் தலைமைச் செயலகம் மட்டும்தான் இங்கே வரவில்லை, இவற்றையெல்லாம் கொண்டு வந்தது திமுக ஆட்சி தான். உலக வரலாற்றிலேயே 40/40 வெற்றி பெற்ற ஒரே கட்சி திமுக தான்.
அன்னியூர் சிவா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய வேண்டும். இது அறிமுக கூட்டம் அல்ல; வெற்றி விழா கூட்டம். சிவா வென்றால் மட்டுமே நானும், பொன்முடியும் மெட்ராஸ் போக முடியும். மு.க.ஸ்டாலின் அவ்வளவு சாதாரணமாக ஒருவரை வேட்பாளராக நிருத்த மாட்டார், அப்படி அவர் நிறுத்தினால் அவரே வெற்றி பெறுவார்.
செல்வப்பெருந்தகை பேசியதாவது, "எத்தனை தேர்தல் வந்தாலும் இந்தியா கூட்டணி தொடரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது, கொள்கை உள்ள கூட்டணி இந்தியா கூட்டணி. தமிழ்நாட்டில் எல்லா திட்டங்களும், ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் நிறைவேற்றி காட்டியுள்ளார் ஸ்டாலின். அதுதான் தமிழகத்தினுடைய சிறந்த தலைவருக்கு உள்ள ஆளுமை.
இதற்கு முன்னால் திருமாவளவன் சொன்னதைப்போல அன்றைய காலகட்டத்தில் ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்த எம்ஜிஆர் கூட தோல்விகளை சந்தித்துள்ளார். ஆனால் ஸ்டாலின் திமுக கழக தலைவராக பொறுப்பேற்ற தினத்திலிருந்து வெற்றிகளை மட்டுமே பெற்று வருகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்காக எவ்வாறு அமைச்சர்கள் குழுவை அனுப்பி நம்முடைய வெற்றிக்கு உதவினாரோ அதே நன்றி கடனுக்காக வரவிருக்கின்ற இடைத்தேர்தலில் சிவா அவர்களின் வெற்றிக்காக காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு தேர்தல் வேலைகளில் ஈடுபட உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்று திமுக முப்பெரும் விழா.. கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு!