தஞ்சாவூர்: கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 287 மாணவ, மாணவியருடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையாசிரியராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தவிர 8 ஆசிரியர்களும், 3 சிறப்பாசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். 1940இல் தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தகுதி உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் 30 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஆனந்தி, தனது திறமையால், குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்து கற்கும் கல்வி முறைக்கு மாறாக, புரிந்து கற்கும் முறையில் கல்வி கற்பித்து வருவதால் இவரிடம் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த மாணவர்களாக தொடர்ந்து தேர்வு பெற்று, பல சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை இப்பள்ளி வளாகத்தில் நடந்த எளிய நிகழ்வில், 3ஆம் வகுப்பு பயிலும் 8 வயதிலான 7 மாணவியர்கள் மற்றும் 3 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் புதிய முறை கல்வி கற்றல் முயற்சியில் வெற்றி கண்டு பலருக்கும் கடினமாக தெரியும் விஷயத்தை சில வினாடிகளில் கிரகித்து, விடையளித்து வியப்படையச் செய்தனர்.
காவியா என்ற மாணவி, இடமிருந்து வலமாக எழுதப்பட்ட 100 விடுகதைளை சரியாக அதற்கான விடைகளையும் 5 நிமிடம் 15 வினாடிகளில் கூறி சாதனை புரிந்தார். அதேபோல், மாணவி சிவகாயத்திரி, ஒவ்வொரு வண்ணங்களுக்கு என ஒரு குறிப்பிட்ட எண் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சரியாக உள்வாங்கி, பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வண்ணத்தை மட்டும் கொண்டு அதற்கான எண்ணை முழுமையாக அதுவரை கோடி வரை இலக்கத்திற்கு என 100 கேள்விகளுக்கு 9 நிமிடம் 15 நொடிகளில் பதில் அளித்து வியப்படைய வைத்தார்.
பிறகு, மாணவி யாஸ்மின் டாப்சீ தலை கீழாக எழுதப்பட்ட 100 வாக்கியங்களை, 4 நிமிடம் 4 வினாடிகளில் சரியாக கூறி சாதனை படைத்தார். இவர்களை போலவே, தனியார் நிறுவன மாணவி தனுஸ்ரீ என்ற மாணவியும் எண்களுக்கு பதிலாக வண்ணமாக குறிப்பிட்டுள்ள 2 முதல் 10 வரையிலான வாய்ப்பாடுகளுக்கு சரியான விடையினை, 11 நிமிடம் 42 வினாடிகளில் எழுதி காட்டியும், இதனையே சதாக்ஷன் என்ற மாணவரும் கூறி சாதனை புரிந்தார். பின்னர் எண்களுக்கு பதிலாக வண்ணங்கள் கொண்ட 100 கேள்விகளுக்கு 6 நிமிடம் 50 வினாடிகளில் சரியாக விடையளித்தும் சாதனை புரிந்தான்.
தொடர்ந்து, மாணவி அட்சயா எண்களுக்கு பதிலாக வண்ண கட்டங்களுக்குரிய மதிப்பை கண்டுபிடித்து 100 கேள்விகளுக்கு கூட்டல் மூலம் 10 நிமிடம் 51 வினாடிகளில் சரியாக விடையளித்தும், அதே போன்று மாணவர் வீரபாலன் கழித்தலில் 100 கேள்விகளுக்கு 18 நிமிடம் 4 வினாடிகளில் சரியாக விடையளித்தும், இதே போன்று ஜெய் பிரணவ் என்ற மாணவர் 100 பெருக்கல் கேள்விகளுக்கு 15 நிமிடம் 15 வினாடிகளில் சரியாக விடையளித்தும் புதிய சாதனை புரிந்தனர்.
பின்னர், படத்திற்கு அளிக்கப்பட்டு ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி, 100 வாக்கியங்களை சரியாக 2 நிமிடம் 36 வினாடிகளில் சரியாகக் கூறி, மாணவி சிவன்யாவும், மாணவி அனன்யா, இடம் இருந்து வலமாக எழுதிப்பட்ட 100 வாக்கியங்களை 4 நிமிடம் 53 வினாடிகளில் சரியாக கூறி சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர். 3ஆம் வகுப்பு பயிலும் இந்த 7 மாணவியர்கள் மற்றும் 3 மாணவர்களின் புதிய உலக சாதனை டாக்டர் ஜெட்லி புக் ஆப் வேல்டு ரெக்காட்ஸாக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி: ஆசிய போட்டிக்கு தகுதிப் பெற்ற கும்பகோணம் தடகள வீரர்