தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வடகரை பகுதியில் உள்ள நான்கு வார்டுகளில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி பெரியகுளம் நகராட்சி அலுவலக வாயில் முன்பாக காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில், ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை எனக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக குடிநீர் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பேரணி நடைபெற்றது.
அப்பொழுது, மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி விட்டு சென்ற நிலையில் பேரணி முடிவற்று நகராட்சி அலுவலகத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை எடுத்துச் செல்ல முற்பட்ட பொழுது மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை சிறை பிடித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை மீட்ட பின், மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் வாகனத்தில் அங்கிருந்து ஏறிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.