தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அகமலை ஊராட்சிக்கு உட்பட்டு ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை உள்ளிட்ட 20 மலைக் கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
அகமலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் சார்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய நிலங்களை விட்டு அங்கிருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட நிலையில், வனத்துறை சார்பில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்ட நோட்டீசை மாவட்ட ஆட்சியர் நிறுத்தி வைத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் மலைக் கிராம விவசாயிகளுக்கு வனத்துறையினர் வெளியேற்றுவதற்கான நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அகமலை ஊராட்சிக்குட்பட்ட சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், வனத்துறையைக் கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வனத்துறையின் இந்தச் செயலுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், இது தொடர்ந்தால் தங்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலைல் கிராம விவசாயிகள் கலந்து கொண்டுனர். இதனால் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பேசிய விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் செந்தில் குமார், “விவசாய நிலங்களை வனத்துறையினர் பறித்து அவர்களை வெளியேற்ற முயற்சி செய்கின்றனர். அகமலை செல்லும் சாலையில் வனத்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து, கிராம மக்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.
ஆனால், மரங்களை வெட்டும் நபர்களை வனத்துறையினர் சட்டவிரோதமாக அனுமதிக்கிறார்கள். இதனால் வனத்துறையின் செயலைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அகமலை ஊராட்சி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். தேனியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மலைக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கை எந்த விதத்திலும் நியாயமற்றது” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "நேற்று முதல்வர் காக்கி பேண்ட் போட காரணம் என்ன?”.. திமுக - பாஜக உறவு.. சீமான் கடும் சாடல்!