தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், கடந்த 2018ஆம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமியை ஆட்டோவில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்.6) வழக்கு விசாரணை முடிவுற்றது.
இந்நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு, மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, இந்திய தண்டனைச் சட்டம் 366-இன் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
அது மட்டுமல்லாமல், வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க உத்தரவிட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை.. நடந்தது என்ன?