சென்னை: பெண் காவலர்கள் குறித்து இழிவான கருத்து கூறியதாகவும், சவுக்கு சங்கரின் ஓட்டுநர் கஞ்சா வைத்திருந்தாகவும் கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்நிலையம் போலீசார், சவுக்கு சங்கர் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெண் காவலர் ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து, அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் தங்கி இருந்த வீட்டில் தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீசார் சோதனை நடத்தி, கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அவரது ஓட்டுநர் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சவுக்கு சங்கர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்படது.
இந்த நிலையில், இதுவரை சவுக்கு சங்கர் ஐந்து வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் இல்லம் மற்றும் சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர், இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சவுக்கு சங்கர் தங்கி இருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் ஏதாவது கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதா அல்லது அது தொடர்பாக வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என சோதனையின் முடிவில் தான் முழுமையான தகவல் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சவுக்கு சங்கருக்கு கை எலும்பில் இரண்டு இடங்களில் விரிசல்" - வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்! - Savukku Shankar Case