தேனி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதை தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன், தேனி தொகுதியில் உள்ள இடங்களுக்குச் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, இன்று (ஜூலை 7) அதிகாலை சைக்கிள் பயணமாக கம்பம் நகர் பகுதிக்குள் வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்குள் சென்றவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்து வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்துச் சென்றார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களிடம் தூய்மைப் பணிகள் குறித்த நிறை குறைகளைக் கேட்டு அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.