தேனி: தேனி - மதுரை சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பங்களா மேட்டில் இருந்து 1.26 கிலோமீட்டர் தூரத்திற்கு 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலப் பணி ஓராண்டுக்குள் முடிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதனால் தேனி - மதுரை சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த பிரதான சாலையின் வழியாகவே சென்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பணிகள் குறித்து விசாரித்த தங்க தமிழ்ச்செல்வன், பாலம் பணிகள் ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்று அதிகாரி, ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார். பத்து நாட்களில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், இச்சாலை சேதமடைந்து காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும், இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார். மேலும், இன்னும் பத்து நாட்களில் தேனி - மதுரை சாலையில் புதிதாக சாலை போடப்படும் எனவும், ஓராண்டுக்குள் மேம்பாலப் பணிகள் முடிவு பெறும் என அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சீமான் வாய்க் கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்' - அமைச்சர் சேகர் பாபு கருத்து