தேனி : தேசிய காசநோய் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் குறித்து கண்டறிந்து எக்ஸ்ரே எடுக்கும் வகையில் நடமாடும் வாகனம் இன்று (டிச 7) அறிமுகப்படுத்தப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காசநோய் ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனம், தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று நோய் உள்ளவர்களை கண்டறியும் வகையில், ஒரு நாளைக்கு சுமார் 200 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் வகையில் வசதி கொண்டது.
தமிழ்நாட்டிற்கு இரண்டு கேந்திர வித்தியாலயா பள்ளிகள் தொடங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டத்திற்கு புதிய கேந்திரிய வித்தியாலயா பள்ளி தொடங்குவதற்கு மத்திய அமைச்சரிடம் இருந்து ஆணை வந்துள்ளது. பள்ளி செயல்படுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு தேனி மாவட்டத்தில் விரைவில் பள்ளி தொடங்கப்படும்.
சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில், த.வெ.க தலைவர் விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு, நாங்கள் இறுமாப்புடன் பேசவில்லை. தமிழக முதலமைச்சர் மக்களுக்காக உழைக்கின்றார்.
மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு ஒதுக்குகின்றது. உழைப்பின் பயனாக மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். மக்களின் ஆதரவில் 200க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தான் முதலமைச்சர் கூறினார். இறுமாப்புடன் நாங்கள் சொல்லவில்லை. மக்களுக்காக உழைக்கின்றோம். உழைப்பின் பயனாக 200க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும்.
இதையும் படிங்க : "கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" - அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு!
விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர் கட்சித் தலைவர் தான் அது குறித்து தெரிவிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிக்கின்றோம்.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். வாகனங்கள் செல்ல இன்று நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்" என்று கூறினார்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில், தவெக தலைவ விஜய், கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை இதுதான்.கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்" என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.