தேனி: தேனியில் பல்வேறு பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் சார்பில் பல்வேறு உணவு பொருள் கடைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. திருச்சியில் சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராகவன் தலைமையில் அலுவலர்கள் தேனியில் உள்ள பல்வேறு உணவுப் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில் தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து, அகற்றப்பட்டு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாண்டியன் டிரேடர்ஸ் கடையில் உள்ள குடோனில் பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் மூட்டை மூட்டைகளாக காலாவதியாகியும், பட்டாசு பெட்டிகள் அருகில் வைத்து விற்பனை செய்யப்பட்டதால் 25,000 அபராதம் விதிக்கப்பட்டு அந்த கடையினை உணவு பாதுகாப்புத் துறையினர் இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் நேரு சிலை அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறிந்து அதனை கீழே கொட்டி 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் பல்வேறு பகுதியில் உள்ள உணவுப் பொருட்கள் கடைகளில் சோதனை செய்து காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து இதுபோன்று காலாவதியான பொருட்கள் கண்டறியப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், எனவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு; தலைமை ஆசிரியை, அவரது மகன் கைது!