தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், பாமா தம்பதியினர். அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் சாமி என்பவர், 15 மாதங்களுக்கு முன்பாக தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டி வாங்கித் தருவதாகக் கூறி, வெங்கடேசனிடம் ரூ.10 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
தற்போது பணத்தை வாங்கி 15 மாதங்கள் ஆன நிலையில் வட்டியும் தரவில்லை, பலமுறை கேட்டு கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது வெங்கடேசனின் மூத்த மகள் கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், கல்லூரிக்கு பணம் கட்ட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால், மனமுடைந்த தம்பதியினர் குடும்பத்துடன் தற்கொலை செய்த முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் தம்பதியினர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மகள்கள் இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக வீட்டுக்கு வந்த உறவினர்கள் தடுத்து காப்பாற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வெங்கடேசன், பாமா இருவரையும் மீட்ட உறவினர்கள், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தற்போது, தம்பதியினர் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தென்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் சேர்த்த தனது மகளுக்கு பணம் கட்ட முடியவில்லையே என்ற விரக்தியில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் வெங்கடேசன், பாமா தம்பதியினர் குடும்பத்துடன் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன் அமர்ந்து, பணத்தைத் திருப்பித் தரக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்