தேனி: தேவாரம் அருகே உள்ள சிந்தளச்சேரியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜா (55). இவரின் முதல் மனைவியான லீமா ரோஸ் இறந்த பிறகு, செலின் மேரி (52) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் முடித்து, தற்போது ராஜ்குமார் (32) என்ற மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
அந்தோணி ராஜா மதுபோதைக்கு அடிமையான நிலையில், நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, அவரது மனைவி செலின் மேரியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இவ்வாறு, கடந்த 2019 ஜூன் 8ஆம் தேதியன்று மதுபோதையில் வந்த அந்தோணி ராஜா, அவரது மனைவி செலின் மேரியை வழக்கம்போல் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அதனால் ஆத்திரம் அடைந்த மனைவி செலின் மேரி, அவரது மகன் ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மகன் ராஜ்குமார் மற்றும் தாய் செலின் மேரி ஆகிய இருவரும் சேர்ந்து, அந்தோணி ராஜாவை கல் மற்றும் கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த அந்தோணி ராஜா, சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தேவாரம் காவல் நிலையத்தில் தாய் மற்றும் மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று (பிப்.23) வழக்கு விசாரணை முடிவுற்று, சாட்சியங்களின் அடிப்படையில் தாய் செலின் மேரி, மகன் ராஜ்குமார் கொலை குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால், தாய் மற்றும் மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் ஒரு வருடம் மெய்க்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இருவரையும் சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.