தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டி ஆர்.கே கார்டன் பகுதியைச் சார்ந்தவர் ராஜன். இவர் ஆனைமலையான் பட்டி பகுதியில் அலோபதி மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
ராஜனின் மகன் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் சூழலில் கடந்த 29ஆம் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு மனைவியுடன் ராஜன் சென்றுள்ளார். வீட்டை பூட்டிவிட்டு சென்று இருந்த ராஜன் தீபாவளியை முடித்துவிட்டு இன்று காலை தனது சொந்த ஊரான ஆனைமலையான்பட்டிக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. அதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜன் வீட்டின் கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த மேலும் அதிர்ச்சியில் மூழ்கினார். வீட்டிலிருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவை காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் வீட்டில் இருந்த சாவியை எடுத்து இயக்கி சென்றுள்ளதாக கூறபடுகிறது.
இதையும் படிங்க: வீடு புகுந்து சிறுவனை தாக்கிய கொடூர கும்பல்... "ஊர்ல இருக்க பயமா இருக்கு" பதறும் மக்கள்..உறுதியான நடவடிக்கை எடுக்குமா அரசு?
இதையடுத்து ராஜன் உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் ராயப்பன்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையாக சிசிடிவி கேமராவை பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் நுழைந்து அடையாளம் தெரியக்கூடாது என அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கருப்பு கலர் ஸ்பிரே பெயின்டினை அடித்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்