புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளாவுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிதி கொடுக்காமல் மத்திய அரசு கைவிரித்து விட்டதாக மக்களவையில் தமிழில் பேசிய திமுக எம்பி கனிமொழி கருணாநிதி குற்றம் சாட்டினார்.
மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், பேரிடர் மேலாண்மை திருத்த சட்டம் 2024 ஐ நேற்று அறிமுகம் செய்தார். இதன் மீது மக்களவையில் இன்றும் விவாதம் நடைபெற்றது. இந்த திருத்த சட்டத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சட்டத்திருத்தம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் வகையில் உள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில் இது தொடர்பாக மக்களவையில் திமுக சார்பில் பேசிய கனிமொழி கருணாநிதி, "நன்றாக படித்து கொண்டு இருக்கின்ற மாணவனை பள்ளி வகுப்புக்கு வெளியே நில்லு என்று சொல்லுகிற மாதிரி ஒரு நிலைமையை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து எல்லா விதங்களிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கக்கூடிய காரணத்தினால், மக்களைப் பற்றி கவலை படக்கூடிய காரணத்தினாலேயே,தொடர்ந்து நல் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற காரணத்தினாலேயே, நாங்கள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம், வஞ்சிக்கப்படுகிறோம்.(கனி மொழியின் பேச்சுக்கு உடன் இருந்த தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.)
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் ரோஜா பூக்களுடன் கவனம் ஈர்த்த எதிர்கட்சி உறுப்பினர்கள்...நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை!
தமிழ்நாடு பக்கத்தில் உள்ள கேரளா மாநிலத்திலும் அதே பிரச்சனை தான். அப்போது, ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி இரண்டு கைகளை விரித்து காட்டினார். இதனைக்கண்ட கனிமொழி கருணாநிதி, "இதேபோன்றுதான் நிதி கொடுக்காமல் இரண்டு மாநிலத்தையும் பார்த்து இல்லையென்று மத்திய அரசு கைவிரித்து விட்டது,"என கூறினார். கனிமொழியின் பேச்சு அவையில் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.
இது குறித்து நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர்,"இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது கூட அதிசயமாக உள்ளது. வயநாடு பகுதியில் பேரழிவு நேரிட்டதை நம்மால் தடுக்க முடியவில்லை. அந்த பேரழிவில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சட்டம் திறமையின்மையை நிறுவனமயப்படுத்துகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் திறன்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்," என்றார்.