சென்னை: நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 26) நடந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை மீதான மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுற்றுலாத் தலங்களில் ரூ.8.10 கோடி செலவில் அடிப்படை வசதிகள், ரூ.2 கோடி மதிப்பில் சுற்றுலாப் பெருந்திட்டம் உள்ளிட்ட 12 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை தரப்பில் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், "சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வணிகச் செயல்பாடுகள் மூலமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை 2023 - 2024ஆம் ஆண்டில் ரூ.31.50 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நேரடியாக நிருவகிக்கப்படும் 26 ஹோட்டல்கள், குத்தகைக்கு விடப்பட்டுள்ள 25 ஹோட்டல்கள், 9 படகு குழாம்கள், 5 உணவகங்கள், 3 ஆலயம் ஹோட்டல்கள், 3 தொலை நோக்கி இல்லங்கள், 1 நீலக்கொடி கடற்கரை, 15 சொகுசு பேருந்துகள், 112 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகங்களில் உள்ள கடைகளின் வாடகை உள்ளிட்டவைகள் மூலம் 2023 - 2024ஆம் ஆண்டில் மட்டும் ரூ.217 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது.
இதில் செலவினங்கள் போக ரூ.31.50 கோடி ஒரு ஆண்டில் லாபம் ஈட்டியுள்ளது. இதே போல, தமிழ்நாடு சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி, ஏற்காடு, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களைக் கண்டறிந்து பயன்படுத்த 'தமிழ்நாடு சுற்றுலாத் தல மேம்பாடுத் திட்டம்' என்ற திட்டத்தை சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி, ஏற்காடு சித்தன்னவாசல், மாத்தூர் தொட்டி பாலம், கங்கைகொண்ட சோழபுரம், மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்த உள்ளது.
சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை லேசர் 3டி மூலம் ஒளியூட்டுதல் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்; அன்புமணிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!