திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த புதுப்பூங்குளம் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (60). இவருடைய மனைவி கலைசெல்வி (56). மகன் ராஜீவ் காந்தி (35). இவர்கள் தங்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பட்டன் ரோஸ் பயிரிட்டுள்ளனர்.
தினமும் காலையில் பூப்பறித்து திருப்பத்தூர் பூ மார்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம் போல கலைசெல்வி தனது கணவர் காந்தியை பூப்பறிக்க செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
அதற்கு காந்தி, ''மழை பெய்து கொண்டிருக்கிறது, மழை நின்ற பிறகு பூப்பறிக்க செல்கிறேன்'' என கூறியுள்ளார். இதனால் காலையில் மனைவி மற்றும் கணவனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து கொண்டிருந்த மகன் ராஜீவ்காந்தி தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து மகனும், தாயும் சேர்ந்து காந்தியை சரமாரியாக திட்டியுள்ளனர். பதிலுக்கு, காந்தியும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து காந்தியை மண்வெட்டியால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 'ரேர் பீஸ் சேட்டா'.. இல்லாத இரிடியதுக்கு 2 கோடி.. கேரளா தொழிலதிபருக்கு கோவையில் அடிச்ச ஷாக்!
இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த காந்தியை வீட்டின் அருகே உள்ள காந்தியின் தம்பி சம்பத் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அங்கு காந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மனைவி கலைசெல்வியையும், மகன் ராஜிவ்காந்தியையும் தேடி வருகின்றனர்.
மேலும், பூப்பறிக்க செல்ல மறுத்ததால் தந்தையை மண்வெட்டியால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்