சென்னை: சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது மனைவி பவித்ரா (31). கிரிதரன் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வைஷ்ணவி (6), சாய் சுதர்சன் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
கிரிதரன் வீட்டில் அதிகமான எலித் தொல்லை இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதனைத் தொடர்ந்து தி-நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை அணுகி, அந்நிறுவன ஊழியர்கள் வாயிலாக வீட்டில் ஆங்காங்கே எலி மருந்து வைத்தததாகத் கூறப்படுகிறது.
குழந்தைகளுடன் கோயிலுக்குச் சென்றிருந்த பவித்ரா வீடு திரும்பியதும், கணவர் மற்றும் குழந்தைகளுடன் படுக்கையறைக்குச் சென்று ஏசி போட்டுத் தூங்கியுள்ளார். ஆனால், நேற்று (நவ.14) காலை சில அசௌகரியங்களுடன் கண்விழித்த வீட்டிலிருந்த அனைவருக்கும் மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கிரிதரன், பவித்ரா மற்றும் இரண்டு குழந்தைகளை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி வைஷ்ணவி மற்றும் சிறுவன் சாய் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் எலி மற்றும் பூச்சி தொல்லை இருந்ததால், ஆன்லைன் மூலம் வரவழைக்கப்பட்ட தி-நகரில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர், வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றில் பேஸ்ட் போன்ற மருந்தை வைத்தார். மேலும், எலிக்கு வீட்டைச் சுற்றி மாத்திரைகளும் வைத்தார் என்று பவித்ரா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு அருகே இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு..உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம்
மேலும், எலி மருந்தானது வீடு முழுவதும் காற்றில் பரவியதாலும், அதனை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நல குறைவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது என்றும், உடனடியாக எலி மருந்து வைத்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி, ஊழியர் என 3 பேர் மீது குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருவர் கைது: இதுமட்டும் அல்லாது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனத்தின் ஊழியர்கள் தினகரன் மற்றும் சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரையும் குன்றத்தூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், உரிமையாளர் பிரேம்குமார் தலைமறைவானதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"குழந்தைகள் இறப்புக்கான காரணம்": இதற்கிடையில், வீட்டின் அறையில் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்றும், மருந்து வைக்கப்பட்ட அறைக்குள் யாரும் வரமாட்டோம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததன் பேரிலேயே மூன்று மருந்துகள் வைப்பதற்கு பதிலாக 12 மருந்துகள் வைக்கப்பட்டதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
நிறுவனத்துகக்கு சீல்: இத்தகைய சூழ்நிலையில், இரண்டு குழந்தைகள் இறந்து போனது குறித்து பெற்றோருக்கு இன்னும் தெரிவிக்காததால், இறந்து போன இரண்டு குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இதில் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாய கட்டத்தை தாண்டிய தம்பதி: இந்த நிலையில், உயிருக்கு போராடி வந்த கணவன், மனைவி இருவரும் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் இருவரும் கூடுதலாக இரண்டு நாட்களுக்கு ஐ.சி.யு-வில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்