சேலம்: பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு உயர்கல்வித்துறைக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில், "சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பதவி நிரப்பப் படாமல் பொறுப்பு பதவியிலேயே இருந்து வருவது வேதனை அளிக்கிறது.
பல்கலைக் கழக நிர்வாகம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பது துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வாணையர்தான். இப்படிப்பட்ட முக்கிய பதவிகள், தற்போது பொறுப்பு பதவிகளாக இருப்பது மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்து விடும்.
துணை வேந்தர் தேடுதல் குழுவிற்கு ஆட்சிக் குழு ஆட்சிப் பேரவை சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்பு, புதிய துணை வேந்தரை தேர்வு செய்யாமல் துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கி இருப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். ஆகவே, புதியவர்களுக்கு வழி விட்டு புதிய துணை வேந்தர் தேடுதலை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல, உறுப்புக் கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக் கழகத்தில் தேவையில்லாமல் பேராசிரியர் ஊதியம் வழங்கி வருவது பல்கலைக் கழகத்திற்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் செயலாகும். இதுவரை 200 புள்ளி இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வேதனை அளிக்கிறது. 200 புள்ளி இட ஒதுக்கீட்டினை முறைப்படுத்த ஒரு வல்லுநர் குழுவினை அரசு நியமிக்க வேண்டும்.
மேலும், 200 புள்ளி இட ஒதுக்கீட்டிற்கு முரணாக நியமிக்கப்பட்ட பணியிடங்களை கண்டறிந்து அங்கு உரிய இட ஒதுக்கீட்டின் மூலம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் உரிமை, பல்கலைக்கழக தேர்வு கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் உரிமை ஆகியவற்றை மீண்டும் வழங்கிட வேண்டும்.
இதையும் படிங்க: "இந்திய மக்களின் எதிர்ப்பை மீறி மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்" - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு!
பல்கலைக்கழக கேண்டீனில் ஒப்பந்தப் புள்ளியில் கோரியவாறு விலைப் பட்டியல் வைக்கப்பட்டு தரமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக ஒரு குழுவினை பல்கலைக்கழகம் நியமிக்க வேண்டும். கடந்த ஓரு ஆண்டுகளாக ஆசிரியர்களின் பணி மேம்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை உடனடியாக அறிவித்து, ஆசிரியர்களின் பணி உயர்வினை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இதுமட்டும் அல்லா, பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் என்றைய தேதியில் முடிவடைகிறதோ அந்த தேதியில் இருந்து அவர்களுக்கு இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்.
இதனால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவி கிடைக்க ஏதுவாய் அமையும். ஆகவே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசினை கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்