மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி காசம்மாள் (வயது 71). இவர் இயக்குநர் மணிகண்டனின் 'கடைசி விவசாயி' படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாக நடித்து உள்ளார். இந்த படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
காசம்மாளின் மூத்த மகன் நாமக்கோடி (வயது 52), தனது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 15 ஆண்டுகளாகத் தனது தாயார் காசம்மாளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப். 4) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தனது தாயை எழுப்பி மது அருந்த நாமக்கோடி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணம் தர மறுத்த தாயிடம் வாக்குவாதம் செய்த நாமக்கோடி ஆத்திரத்தில் அருகே இருந்த கட்டையை எடுத்து காசம்மாளின் தலையில் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் காசம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதனை அறிந்த அருகாமை வீட்டார் காவல் துறையினருக்குத் தகவல் அளித்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த உசிலம்பட்டி போலீசார், உயிரிழந்த காசம்மாளின் உடலைக் கைப்பற்றி உசிலம்பட்டியில் உள்ள மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், காசம்மாளின் மகன் நாமக்கோடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாக நடித்த காசம்மாள் என்ற மூதாட்டி குடிப்பழக்கம் உள்ள தனது மகனால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறாரா? ரசிகர்களின் வேண்டுகோள் இதுதான்!