சென்னை: அமைந்தகரை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 31 ஆம் தேதி 16 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். வீட்டு வேலைக்காக தஞ்சாவூரில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுமியை அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்வழக்கில், முகமது நவாஷ் அவரது மனைவி நாசியா, நவாஸின் நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, நவாஸின் சகோதரி சீமா அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் மகேஸ்வரி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் கொலைக்கு நியாயம் கேட்டு சென்னை அமைந்தகரை காவல் நிலையத்திற்கு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் சடலத்தை புதைத்துச் சென்ற மர்ம நபர்கள்.. பொள்ளாச்சி அருகே பரபரப்பு!
பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது; "குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று முதல்வர் சொல்கிறார். ஆனால், சென்னை மாநகரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். பட்டியல் இன சமூகத்தை சார்ந்த ஒரு சிறுமியின் உயிர் இன்றைக்கு பறிபோய் இருக்கிறது. இதுகுறித்து எந்த விதமான விளக்கமும் வராமல் நாங்கள் கைது செய்து விட்டோம் என்று இந்த பிரச்சனையை மூடி மறைக்க பார்க்கிறார்கள். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்றுக் கொள்ளாது.
சிறுமியின் கொலை குறித்து விசாரிப்பதற்கு காவல் நிலையத்திற்கு வந்தால், காவல்துறையினர் எங்களை உள்ளே விடாமல் மூடி மறைப்பதற்கு பார்க்கிறார்கள். ஆகவே இந்த பிரச்சனையில் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் முழுமையான நீதி விசாரணை வேண்டும், இந்த பிரச்சனை எதற்காக நடந்தது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
சிறுமியை குடும்பமாக சேர்ந்து அடித்து சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில் தகுந்த நீதி கிடைக்க வேண்டும். இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் சிறுமியை அடித்து கொலை செய்துள்ளார்கள். இதைக் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மௌனம் காப்பது ஏன் என தெரியவில்லை.
தொடர்ந்து சென்னையில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆகவே இந்த மரணத்தை தட்டி விட்டு போக முடியாது, எனவே இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்