சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த 2017ம் ஆண்டு அதிமுக-வில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியதைச் சுட்டிக்காட்டி, ஆட்சி கவிழ்ந்து விடக் கூடும் என்ற காரணத்தால் இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அரசியலமைப்பு சட்டப்படி, சட்டமன்ற பதவிக்காலம் முடிந்ததும், சட்டமன்றம் கலைந்து விடுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதியாகி விடுகின்றன. தற்போதைய சட்டமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடியாது எனவும், உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தார்.
உரிமைக் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிமைக்குழு நோட்டீஸ் காலாவதியாவதில்லை. ஏனென்றால் உரிமைக்குழு எந்த கட்சிக்கும் ஆதாரவானது கிடையாது. அது தனி அமைப்பு, அதன் செயல்பாடுகளை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜூலை 29ம் தேதி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜூலை 31) தீர்ப்பளித்த நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்ப அனைத்து அதிகாரமும் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் விதிகளுக்கு எதிராக செயல்படுவதை அனுமதித்தால் அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமைந்து விடும்.
மக்களின் பிரதிநிகள் அடங்கிய சட்டமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஏற்கனவே அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டமன்ற உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் மீது தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு; முன்னாள் டிஜிபி வாட்ஸ்ஆப்பில் மன்னிப்பு கேட்க உத்தரவு!