சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக திமுகவைச் சேர்ந்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனை அடுத்து, அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, பதிவு செய்யப்பட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது, சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிக வாகனங்களைப் பயன்படுத்தியது, அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகத்தைத் திறந்தது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராகக் கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று வழக்குகள் காவல் துறை மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 2022ஆம் ஆண்டு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நீட் போராட்டம் என்பது ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டம். இதில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.
மேலும், "தேர்தல் வழக்குகளைப் பொறுத்தவரை, பெரியகருப்பன் வேட்பாளர். மற்ற வாகனங்கள் வந்தது குறித்து அவருக்குத் தெரியாது என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு இந்த வழக்குகள் தொடரப்பட்டதாகக் குறிப்பிட்டும், மூன்று வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி இளந்திரையன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இலங்கை முகாம் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!