சென்னை: கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ''உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள், யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர்'' என்று பேசினார்.
இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி, மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அதிமுக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நிராகரித்துவிட்டார்.
ஆட்சி மாற்றத்துக்கு, முந்தைய உத்தரவை ரத்து செய்து, அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென திமுக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், திரும்பப் பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 10 மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்காக 25 பைக் ஆம்புலன்ஸ்! - அரசாணை வெளியீடு!
இந்நிலையில், தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து ஆடிட்டர் குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி பெற்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில், அரசு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்பதால், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, 12 வாரங்களில் பதிலளிக்கும்படி, குருமூர்த்திக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்