சென்னை: தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்கள் 40 லட்ச ரூபாய் அளவிற்கு எதிராகப் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்தியக் குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இந்தப் புகார் பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இதன் பின்னரும், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கவில்லை எனக் காவல்துறையினர் மீது ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் முன்னாள் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பாண்டி பஜார் காவல் நிலைய 5 ஆய்வாளர்களில், இருவர் தாங்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாகத் தெரிவித்திருந்த நிலையில், அவர்களின் மருத்துவச் சான்றிதழைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (பிப்.20) மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட இரண்டு ஆய்வாளர்களின் மருத்துவச் சான்றிதழைத் தாக்கல் செய்தார்.
மேலும், இந்தப் புகாரின் தீவிரத் தன்மையை உணர்ந்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த விசாரணையை உதவி ஆணையர் மீண்டும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
காவல்துறையின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை முடித்து அதன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!