சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணையில் இருந்தது. அப்போது, சுப்பையா சார்பில், செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்து உள்ளதாகவும், இது தொடர்பாக சுப்பையா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், அந்த வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை எனவும், அவருக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்திய விசாகா குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், சுப்பையாவுக்கு எதிராக இது போன்ற பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது. பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகார் அடிப்படையிலேயே சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 8) தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பணியிடை நீக்கத்தை எதிர்த்த சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "மதுவை வாங்கி வீட்டுக்கு சென்று குடியுங்கள்" - உயர் நீதிமன்ற மதுரை கிளை