தேனி: பழனிசெட்டிப்பட்டியில் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,"தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது. அதிமுக என்கிற கட்சி இருக்கின்றதா என்று தெரியவில்லை. கொங்கு மண்டலத்தில் மட்டும் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு இருந்து வந்தது. தற்போது அண்ணாமலையால் அதுவும் இல்லாமல் போய்விட்டது. கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியை எந்த ஒரு முக்கிய தலைவரும் சென்று பார்ப்பதில்லை.
எந்த மக்களும் அவரிடம் சென்று கோரிக்கை மனுக்களைக் கொடுப்பதில்லை. இப்போதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர்கள் சொல்வது ஒன்றுதான் அதிமுகவை வழிநடத்தக் கூடிய ஒரே தகுதி ஓபிஎஸ்க்கு மட்டும்தான் உள்ளது என்று கூறுகிறார்கள்.
மகாபாரதத்தில் துரோகத்திற்கு என்று ஒரு பெயர் உள்ளது அதனை எடுத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி என்று தான் போட வேண்டும். அதிமுகவில் வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கின்ற ஒரே ஆள் ஜெயக்குமார் தான். தற்போது சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லை அவரின் வேலை அண்ணாமலையை திட்டுவது பிரதமரை திட்டுவது தான்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி இருக்கலாம். ஆனால் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருவது நாங்கள் தான் என மக்கள் கூறுகின்றனர். 2026 ஆம் ஆண்டு பலமான கூட்டணி அமைத்து திமுகவை எதிர்த்து பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறிய அவர் எம்பி தேர்தலில் அதிமுக அதனுடைய வாக்கு வங்கியை இழந்தது. கோவை தொகுதியில் திமுகவுடன் வேலுமணி, தங்கமணி டீலிங் போட்டுக்கொண்டு வேலை செய்தார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து சொன்னபோது மட்டும் இனித்தது?" - எடப்பாடி பழனிசாமி தாக்கு!