சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மகளிர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலை வகித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பா வளர்மதி, தமிழகத்தில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டுமென்றால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்றார். எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றால் தான் பெண்களுக்கான திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இதையும் படிங்க: "வலுத்த கோரிக்கை பழுக்கும் நேரம்" முரண்படுகிறாரா துரைமுருகன்?
தொடர்ந்து பேசிய அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல் இந்திரா, ''திமுக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் இந்த வேலையில், தமிழக முதலமைச்சர் உல்லாசமாக சுற்றுலா சென்று இருப்பதாக'' அவர் விமர்சித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா, ''திமுகவில் இருக்கக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை இருக்கிறது. திமுகவுக்கு நாட்டு மக்கள் மீதும் அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் பகலில் கூட பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை'' என குற்றம் சாட்டினார்.