கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சிகள் உள்ளன. இதில் தாத்தூர் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தாத்தூர் ஊராட்சி, இரண்டாவது வார்டு, ராயல் ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் புதிதாக சாலை அமைத்து தரக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போதுமான அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, தாத்தூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகத்தை மூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அப்போது, ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சக்திவேல் அலுவலகத்தை திறக்க முயற்சித்தார். இதனையடுத்து, பொதுமக்கள் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அலுவலகத்தின் உள்ளே யாரும் செல்லக் கூடாது என அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், இரு தரப்பினரிடமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விரைவில் சாலை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: காத்திருந்த பயணிகள் மீது தாறுமாறாக மோதிய தனியார் பேருந்து.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! - CCTV Video Of Bus Hit Passengers