தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஞானம் நகரில் வசித்து வருபவர் கல்பனாதேவி. இவரது மகன் தேவன். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தபோது, அறிவியல் தேர்வுக்கு முதல் நாள் தேவனின் தந்தை பாலக்குமார் இறந்து விட்டார். இதனையடுத்து, மகன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டி இருப்பதால், அவனை வெளியே அனுப்ப வேண்டாம் என உறவினர்கள் தாயிடம் கூறி உள்ளனர்.
பின்னர், உறவினர்கள் பேச்சையும் மீறி, தாய் மகனை தேர்வு எழுத அனுப்பி வைத்துள்ளார். பின்னர், அறிவியல் தேர்வை எழுதி விட்டு வந்து தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார் மாணவர் தேவன். இந்நிலையில், இன்று (மே 10) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியான நிலையில், தேவன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, அறிவியல் பாடத்தில் 64 மதிப்பெண்கள் எடுத்து உள்ளார். இந்த சந்தோஷத்தை தனது மகனுக்கு இனிப்பு ஊட்டி, கன்னத்தில் முத்தமிட்டு தாய் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து அவரது தாய் கூறுகையில்,"பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தில், அவனது அப்பா இறந்துட்டாங்க, இறுதிச்சடங்கு செய்யும் பையன் வெளியே போகக்கூடாது என உறவினர்கள் சொன்னபோது நானும், எனது பெரிய பையனும் எல்லோரிடமும் மறுப்பு சொல்லிட்டு, பரீட்சை தான் வாழ்க்கையில் முக்கியம் என்று சொல்லித் தேர்வுக்கு அனுப்பினேன்.
அந்தச் சூழ்நிலையிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளான். எல்லா மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள், எந்தச் சூழ்நிலையிலும் படிப்பை விட்டு விடாதீர்கள். படிப்பு தான் வாழ்க்கையில் முக்கியம்" என வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவன் கூறுகையில், "தேர்வு எழுதறப்ப கஷ்டமா இருந்துச்சி, ஆனா மார்க் பார்த்துட்டு சந்தோஷமா இருக்கு" என்று கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த 7 நாட்களுக்கு நோ ப்ராப்ளம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்! - TN RAIN UPDATE