தஞ்சாவூர்: சமீபகாலமாக, தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் அத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வெளியிட்ட செய்தி குறிப்பில், “தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் கழுகப்புளிக்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 7ஆம் தேதி மாலை மாணவிகள் ஒரு குழுவாக பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த வேலையில் அங்கு நின்று கொண்டிருந்த ஆம்னிவேனையும், அதில் இருந்த நபர்களையும் பார்த்து மாணவிகளில் ஒருவர் இவர்களைப் பார்த்தால் குழந்தை கடத்துறவங்க மாதிரி இருக்கு என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு மாணவிகள் அனைவரும் பயந்து ஓடிய நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் என்னவென்று தெரியாமல் விசாரிக்கும் பொழுது மேற்படி விவரம் தெரியவந்துள்ளது. அதில் ஒரு மாணவி அருகில் உள்ள தனது வீட்டிற்கு ஓடிவந்ததைக் கண்ட அவரது தாயார், விவரம் தெரிந்து ஆம்னிவேன் நின்ற இடத்திற்கு வந்தார். அங்கிருந்த பொதுமக்களில் சிலர் ஆம்னிவேனில் வந்த நபர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரும் வாகனத்தில் இருந்தவரிடம் யார் நீங்கள் என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
வாகனத்தில் வந்தவர் காலணி வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்பதும் சம்பவத்தன்று பட்டுக்கோட்டை பகுதிகளில் வியாபாரத்தை முடித்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்த பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நின்று இருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் தாயார் நடந்த விவரம் பற்றி கூறியதன் அடிப்படையில் பள்ளி மாணவிகளை விடாமல் பின் தொடர்ந்த மர்மவேன் என்று செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு இந்த செய்தியை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம். அவ்வாறு பகிரப்படும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்” என அதில் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு.. இந்த மாதமே பணிகள் தொடங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு!