தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35), இவர் எம்.காம்., படிப்பு முடித்துவிட்டு முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கிடையே, இவர் பல்வேறு நாடுகளில் உள்ள அவரது நண்பர்களுடன் இணைந்து சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் விக்டர் ஜேம்ஸ் ராஜா 18 வயதுக்குட்பட்ட சில சிறுமிகளைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததும், சிறுவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதும், அதை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ அதிகாரிகள், விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ உள்பட பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து, அவரை கைதும் செய்தனர். இதன் பின்னர், விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜ் விசாரணை செய்து, விக்டர் ஜேம்ஸ் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று (ஜூலை 09) தீர்ப்பு வழங்கினார். அதோடு பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் மூன்று பேருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் சமஸ்தான நகைகள் காணாமல் போன விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி