தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்கோயில்களுக்குச் சொந்தமான 44 குளங்கள் உள்ளன. அந்த குளங்களுக்கு நீர் வரும் 11 வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்புபடி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து கால்வாய்களும் அகற்றப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆறு ஆண்டுகளைக் கடந்த பிறகும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை எனக்கூறி, யானை ராஜேந்திரன் இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 19) மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததையடுத்து, தஞ்சை மாவட்ட ஆட்சியரை, ஆட்சியராக இருக்க தகுதியற்றவர் என கடுமையாக சாடியதுடன், 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அக்டோபர் 28ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என நேற்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள 44 குளங்கள் மற்றும் அதற்கு நீர் உள்வரும் 11 வாய்க்கால்களை இன்று (ஆகஸ்ட் 20) காலை முதல் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில், மயிலாடுதுறை மண்டலம் அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் சண்முகம் பல்வேறு அரசுத் துறையினர் சாரங்கபாணி கோயிலுக்குச் சொந்தமான பொற்றாமரைக்குளம், நாகேஸ்வரன் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சூர்ய புஷ்கரணி, வியாழ சோமேஸ்வரசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சந்திர புஷ்கரணி உள்ளிட்ட குளங்களையும், அதற்கு நீர் வரும் வாய்க்கால்களையும் நேரடியாகச் சென்று அதிரடி களஆய்வில் இறங்கினர். இதனால் அப்பகுதிகள் இன்று பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
இது குறித்து பேசிய தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவிற்கேற்ப இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சாவூர் ஆட்சியரின் ஆணைப்படி, கும்பகோணம் பொற்றாமரை குளத்தைச் சுற்றியுள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் குளங்களின் நிலப்பரப்பு கணக்கெடுக்கபட்டு முடிவுகள் அறியப்பட உள்ளது. விரைவில் ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள் மற்றும் கால்வாய்கள் அகற்றப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 12 வாரங்கள் கெடு.. ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தஞ்சை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி!