தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட மெலட்டூர் அருகே உள்ள கோணியக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதன வினோதகன். அப்பகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது, வினோதகன் கோரிய பாடலை போடுவதற்கு அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதான ரமேஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (31), சேகர் (55) மற்றும் ராஜா (46) ஆகியோர் சேர்ந்து வினோதகனை தாக்கி, டியூப்லைட்டை உடைத்து அவரது கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த வினோதகன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து மெலட்டூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: மது அருந்த அழைத்த நண்பர்கள்.. தஞ்சையில் ரவுடி வெட்டிக் கொலை.. நடந்தது என்ன?
அதன் தொடர்ச்சியாக, தகராறில் ஈடுபட்டு வினோதகனை கொலை செய்த ரமேஷ், சந்திரசேகர், சேகர், ராஜா ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து, இந்த கொலை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (செப்.25) நீதிபதி ஆர்.சத்யதாரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கைதான ரமேஷ், சந்திரசேகர், சேகர், ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்