தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில், இன்று அதிகாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன், சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த நபர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 7 நபர்களை உடனடியாக மீட்டு, அருகில் இருந்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்துச் சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் வேனில் பயணித்த பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இறந்த நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உடற்கூறாய்விற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படுகாயமடைந்த 7 பேருக்கும், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்த கோர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதன் முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து 4 சக்கர வாகனத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ் செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53), பாக்கியராஜ் (62), ஞானம்மாள் (60), ராணி (40), சின்னபாண்டி (40) ஆகிய 11 நபர்களும் வேளாங்கண்ணி கோயிலுக்குச் செல்வதற்காக பயணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், வாகனம் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில், அதிகாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது, திடீரென ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த வாகனம் திடீரென விபத்துக்குள்ளானதால், தலைகுப்புற உருண்டு சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
அதில் பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னபாண்டி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். மற்ற 7 பேரும் பலத்த காயங்களுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டு, தற்போது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்ற 4 சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி, 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு!