தேனி: தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்த பின், இன்று முதல் தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். பெரியகுளம் ஒன்றிய பகுதியான கெ.கல்லுப்பட்டியில் ஆரம்பித்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, அ.வடிப்பட்டி குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் காலை 9 மணி முதல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது கூடியிருந்த வாக்காளர்களிடம், "திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளில் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம். மக்களவைத் தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களிக்கவில்லை என்றால், தற்போது கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். எனவே, உதயசூரியனுக்கு மட்டும் வாக்களியுங்கள்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்களுக்கு, தான் வெற்றி பெற்றவுடன் நேரடியாக வந்து பெற்று தருவேன்” எனக் கூறினார். அதற்கு பெண்கள் கைதட்டாமல் இருந்ததால், இதற்கு கைதட்டுங்கள் எனக் கூறி தனது பேச்சிற்கு கைதட்டை கேட்டு வாங்கினார். மேலும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சமையல் எரிவாயு விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் டீசல் விலை 75, 65 என வழங்கப்படும்.
இதனால் செலவுகள் குறையும், அனைவருக்கும் வருவாய் கூடும். இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட் அகற்றப்படும், அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் 100 நாள் வேலை திட்டத்திற்கு 400 ரூபாய் சம்பளம் வழங்கப்படுமா எனக் கேட்ட போது, தங்க தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முதலமைச்சர் உயர்த்தி தருவார் என்றும், எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து திமுகவிற்கு வாக்களியுங்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: டோக்கனுக்கு பணம் தராததால் வாக்குவாதம்.. தேனி திமுக பிரசாரத்தில் நடந்தது என்ன? - DMK Candidate Thanga Tamil Selvan