ஈரோடு: வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகளின் வகைகள், உணவுப் பழக்கம் மற்றும் வேட்டையாடும் குணம் ஆகியவை குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறுவதாவது, “பூனை குடும்பத்தைச் சேர்ந்த சிறுத்தை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் காடுகளில் வசிக்கின்றன. சிறுத்தைகளை ஒன்பது வகைகளாகப் பிரிக்கலாம். சிறுத்தைகளும் கருஞ்சிறுத்தை எனப்படும் சிறுத்தைகளும் வேறு வகைகளா என்றால் இல்லை. நிறமி குறைபாடு காரணமாகச் சிறுத்தை முற்றிலும் நிறம் மாறி கருஞ்சிறுத்தையாக மாறுகிறது. அதுவும் இந்தியச் சிறுத்தை வகையைச் சார்ந்தது தான்.
இந்தியச் சிறுத்தைகளைத் தவிரப் பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை வகைகள் உள்ளன. தமிழகத்தில் அதிக அளவில் காணப்படுவது இந்தியச் சிறுத்தை வகைகள் தான். சிறுத்தைகள் மான், குரங்கு, பறவையினங்களை வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டவை. இவை வனத்தை விட்டு வெளியே வரும் பொழுது வனத்தை ஒட்டி வசிக்கும் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.
வேட்டையாடும் வன உயிரினங்களை அங்கேயே சாப்பிடாமல் மரத்தின் மீது உயரத்தில் வைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவை சிறுத்தைகள். ஏனென்றால் வனத்தில் வாழ்கின்ற கழுதைப்புலி போன்ற உயிரினங்கள் சிறுத்தை வேட்டையாடும் இரையைக் களவாடிச் சென்று விடும் என்பதால் மரத்தின் மீது வைத்து உண்ணுகின்றன. பொதுவாகச் சிறுத்தைகளை அவற்றின் உடலில் காணப்படும் ரோஜா மலர் போன்ற அடையாளங்களை வைத்து வேறுபடுத்திக் கொள்ளலாம்.
சிறுத்தை ஆட்கொல்லி அல்ல: சிறுத்தைகள் வேட்டையாடும் பொழுது 20 அடி தூரம் வரை பாய்ந்தும், பத்தடி உயரம் வரை குதித்தும் வேட்டையாடும் குணம் கொண்டவை. வனப்பகுதியில் புலிகள் வாழும் இடத்தில் சிறுத்தைகள் அதிகமாக இருக்காது. அதே போலப் புலி சிறுத்தை சண்டையிட்டுக் கொள்ளாது. வனப்பகுதியை விட்டும் வெளியேறும் சிறுத்தைகள் நாய்கள் மற்றும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுமே தவிர மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லி சிறுத்தைகளாக அவைகள் ஒருபோதும் மாறுவதில்லை.
ஆகவே சிறுத்தையைக் கண்டு மனிதர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வனப்பகுதி ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் சிறுத்தைகள் நடமாடும் பொழுது உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். சிறுத்தைகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்றால் புலிகளுக்கு அடுத்தபடியாகச் சிறுத்தைகள் ஊன் உண்ணியாக (carnivore) உள்ளது.
தாவர உண்ணிகளை (herbivore) கட்டுப்படுத்தும் சக்தியாகச் சிறுத்தைகள் உள்ளன. சிறுத்தைகளைப் பாதுகாத்தால் காடுகளின் வளம் உயரும். வனத்துறையோடு மக்களும் இணைந்து சிறுத்தையைப் பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது” - திமுக அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் - ஈபிஎஸ் அறிவிப்பு!