கும்பகோணம்: தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகக் கருதப்படுவது கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில். இது பிரபவ முதல், அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருடத் தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.
தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதது இந்த தலம். எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், "சிவகுருநாதன்" என்றும் சுவாமிக்கே நாதன் ஆனதால் "சுவாமிநாதன்" என்றும் போற்றப்படுகிறார். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் இத்தலம் பாடப்பெற்றது.
மேலும், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய இடம் என்றும், இந்திரனுக்குச் சாபவிமோசனம் கிடைத்ததால், ஐராவத யானையினை இத்தலத்தில் காணிக்கையாகச் செலுத்திய பெருமையும் இக்கோயில் கொண்டுள்ளது. இதன் காரணமாக இங்கு முருகப்பெருமானுக்கு மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி யானை வாகனம் அமைந்துள்ளது.
மகாமுனி அகத்தியர், முருகப்பெருமானைப் பூஜை செய்து வழிபட்ட தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்புப் பெற்ற ஸ்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அந்த இந்த ஆண்டிற்கான விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிது.
அன்று முதல் நாள்தோறும் காலையும், மாலையும் படி சட்டத்தில், சுவாமியின் பிரகார உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 10ஆம் நாளான இன்று (ஜன.25) தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, மூலவர் சுவாமிநாத சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதன் பின்னர், வெள்ளிக் கவசத்துடன் வைரவேல் சாற்றப்பட்டது. தொடர்ந்து முற்பகல் சமயத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத பால சுப்பிரமணிய சுவாமி பிரகார உலாவும், அதைத் தொடர்ந்து வீதியுலா சென்று, காவேரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுமார் 2 மணி நேரம் காத்திருந்து வந்து தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும், சிலர் கும்மியடித்தும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே சுவாமி தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் நாள் முழுவதும் அன்ன பிரசாதங்கள் வழங்கப்படுகிறது இதனைத் திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி கோயில் கண்காணிப்பாளர் பழனிவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் நடைபெற்ற கோயில் திருவிழா; இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்த ஜெர்மனி பெண்..