சென்னை: மேற்குவங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்ட பகுதியைச் சேர்ந்தவர் அனோவர்ஷேக் (30). இவர் மீது மேற்குவங்க மாநில போலீசார் UAPA சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க நினைத்தல் அல்லது தாக்குதல் நடத்த திட்டமிடுதல், அரசுக்கு எதிராக சட்ட விரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இவர் 'அன்சார் அல் இஸ்லாம்' என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்பு உடையவராக இருப்பதாகவும், இந்த இயக்கம் அல்கொய்தா மற்றும் பங்களாதேஷ் நாட்டிற்கு ஆதரவாக உள்ள இயக்கமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அனோவர்ஷேக் தலைமறைவான நிலையில், மேற்குவங்கம் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த அனோவர்ஷேக் கோயம்பேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு வளாகம் அருகே கட்டுமான இடத்தில் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், மேற்குவங்க போலீசார் சென்னை கோயம்பேடு போலீசார் உதவி உடன் அவரை கைது செய்தனர்.
மேலும், இவர் சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற பயங்கரவாதி கொடுத்த தகவலின் பெயரில், மேற்குவங்க போலீசார் கோயம்பேடு வந்துள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட அனோவர்ஷேக் எனும் பயங்கரவாதியிடம், சென்னையில் வேறு யாராவது தங்கி இருந்தார்களா, இவருடன் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை மாத்திரை விவகாரம்; சேலத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி கைது!