திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் உள்ள சத்யா காலனி என்ற பகுதியில் அமைந்திருக்கும் பொன்னம்மாள் நகரில் கார்த்தி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கார்த்தி கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாகவும், இந்த நிலையில் இன்று (அக்.08) கார்த்தியின் வீட்டில் திடீரென அதிக சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த நாட்டு வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், அந்த நபரின் உடல் பாகங்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் வரையிலும் சிதறிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வெடி விபத்தில் 3 குழந்தைகள் உள்பட எட்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 20 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி இறந்த நிலையில், குமார் என்பரும், ஒன்பது மாத குழந்தை ஆலியா செர்ரினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மெட்ரோ பணி காரணமாக கட்டடத்தில் விரிசல்; பெற்றோர்கள் போராட்டம்.. பள்ளிக்கு அக்.13 வரை விடுமுறை!
இத்தகைய சூழ்நிலையில், திருமுருகன் பூண்டி காவல் நிலைய போலீசார் தகவலறிந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வேறு எங்கேனும் நாட்டு வெடிகள் சிதறி கிடக்கின்றனவா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது? இங்கு எப்படி நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது? இதற்கு முக்கிய காரணம் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் மற்றும் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "வெடி விபத்து நடந்த வீட்டை சுற்றிலும் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் உரிய நிவாரணம் வழங்கப்படும். மேலும், உரிய அனுமதியின்றி வெடி தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் லட்சுமி, "வீட்டில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் மற்றும் அவரது மைத்துனர் சரவணக்குமார் ஆகியோர் வெடித்த நேரத்தில் வெளியே சென்றுள்ளனர். கார்த்திக்கின் மனைவி சத்யபிரியா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடி தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்புக்கான உரிமம் பெற்றுள்ளதாகவும், திருப்பூரில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக வெடி தயாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுமட்டும் அல்லாது, திருமுருகன் பூண்டி போலீசார் வெடி பொருட்கள் பிரிவு 3 (உயிர் அல்லது உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடிவைத்தல்), 5A (சொத்து பறிமுதல்) மற்றும் 9B (வெடி பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி அல்லது ஏற்றுமதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சரவணகுமாரைத் தேடி ஈரோடு மாவட்டம் நம்பியூருக்கு தனிப்படை போலீசார் புறப்பட்டுச் சென்றுள்ளனர். சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்