தென்காசி: தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன்(34), விவசாயியான இவர் தனது நிலத்திற்கு தரிசு நிலச் சான்று பெறுவதற்காக மத்தளம்பாறை பகுதி கிராம நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் என்பவரை நேரில் பார்க்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.
அதனடிப்படையில், கதிரேசன் தென்காசி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று தர்மராஜை அணுகியுள்ளார். ஆனால், தர்மராஜோ கதிரேசனிடம் தரிசு நில சான்றிதழ் வழங்குவதற்கான நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூ.20 ஆயிரம் வரை தரவேண்டும் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கதிரேசனும் பேரம் பேசி முதலில் ரூ.5 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத கதிரேசன், தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடன் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையின், வருவாய் ஆய்வாளரிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுக்குமாறு தெரிவித்து மறைந்திருந்து காத்திருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரி பணத்தை வாங்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தர்மராஜை கையும் களவுமாக பிடித்துள்ளனர். தற்போது இதுதொடர்பான விசாரணைக்காக வருவாய் ஆய்வாளரை அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: த.வெ.க. கல்வி விருது விழா: 2ஆம் கட்டமாக இன்று மாணவர்களை சந்திக்கும் விஜய்!